Wednesday, September 15, 2010

2ம் லெப்.தமிழழகி

 

17.04.1999

மிக இளைய பராயத்திலேயே அறிவியல் புத்தகங்களிலிருந்து ஆராய்ச்சிப் புத்தகங்கள் வரையிலும் சிற்றிதழ்களிலிருந்து சிறுகதைகள், நாவல்கள் ஈறாக ஊடாடிய உயரம் அவள்.

அவளது வாசிப்பாற்றலே, அவளது பல்துறை ஆற்றலினதும் அளவுகோல். புத்தகம் என்றால் சந்தடிஎல்லாமே சமாதியாகிவிடுவாள். ஊன் உறக்கம் எல்லாம் அடுத்த பட்சம், கடமை மட்டும் நீங்கலல்ல.

கடமை நீங்கல் ஆகையில், காணிக்கை அதிகம் வேண்டியிருக்கும். ஓய்வொழிச்சல் நேரங்கள் இரையாகும். நித்திரா தேவிக்கு நிந்திப்பு நடக்கும். நள்ளிரவு தாண்டியும் வாசிப்பு நீளும். அதிகாலையும் கண்டு, அடுத்தநாள் கடமையும் அரவணைத்த நாட்கள் அவள் பதிவில் இருக்கிறது.

தன் பணிசார்ந்த வேலையோ எதுவோ எடுத்த காவடி ஆடி முடித்துத்தான் இறக்கப்படும். இரவுபகல். மாற்றங்கள் அவளை வரையறுத்துக் கொண்டதில்லை. கற்பதில் ஆர்வம் எப்பவும் சாதிக்க வேண்டும் என்ற ஓர்மம் எவ்வேலையானாலும், வேளையானாலும் கற்றுத் தனித்தியங்கும் துடிப்பு.

சமையலிலும் சமர்த்து. தொடர்சமையல்தான் பணியென்றாலும் சலியாத சிருஸ்டி பலமைல்கள் பொதி சுமந்து பொசுங்காத பூரிப்பு. கோபம் கோலமிடுக் கண்டதில்லை. வயதுக்கு மீறிய வளர்த்தி மட்டுமல்ல வனப்பும் ஆர்வ வளமும் அவளிடம்.

துன்பப்படுபவர்கள், பெரியவர்களோ, சிறியவர்களோ, பொறுப்பாளரோ பணியாளரோ மந்திராலோசனை நடக்கும் ஒவ்வொன்றையும் எப்படி எதிர்கொள்ள வேண்டுமென்றே எதிர்வு கூறல்கள் விளக்கங்கள், வியாக்கியானங்கள் முன்மொழியப்படும். சிறியவளளிற்க்குள் இருக்கும் சீமாட்டி வெளிப்பட்டு கட்டிடபோடும் துணுக்குற்றவரை.
ஆச்சி அளந்து கொண்டே போவாள்.

அவள் அடிப்படைப் பயிற்சி முடித்து வெளிவந்தபோது அவள் வயதை ஒத்தவர்கள் அடிப்படைக் கல்வி பெற தேர்வாக்கப்பட,அவள் கணிணிக்கற்கை நெறிக்காய்த் தேர்வானாள். அவள் கணிணியைக் கற்றுக்கொண்டே கடமையைத் தொடர்ந்தாள். அவள் வேலைகளின் ஐக்கியம் ஆழ அகலப் பரிமாணங்கள் பொருத்தங்கள் முரண்களாய் வெளிபடுத்தப்படும்.

போராட்ட வாழ்வில் அலுவலகப்பணியென்பது அதிமுக்கிய பணியாகிற போதும் பற்றிப் பிடிக்கச் செய்யும் பணியன்று. போர்களப் பணிக்காய் தாக்கல் செய்ய வைக்கும் மகிமை அதற்குண்டு.

தமிழழகிக்கு மட்டும் விதிவிலக்கு. ஞாபகத்திரையில் அத்தனையும் டாலடிக்கும். பணிச்சிரத்தையின் பரிசு என்று பாராட்டுதள் வேறு கிடைக்கும்.அசிரத்தை அவளிடம், தன்னைக் கவனத்தில் கொள்வதை மட்டுமே. டக்(Duck) டக்கி என்று செல்லமாயும் காரணமாயும். (வாத்துப்போல் நடப்பதனால்) அழைக்கப்படும் அவள் டக்கேதான்.

ஓயாத அலைக்கரம் அகன்று கொண்டபோது சண்டை அனுபவத்திற்கான வாய்ப்பு அவளுக்கு வாய்த்தது. நிர்வாகப் பணியிலேயே நிலைத்து விட்டவளுக்கு சுட்டதீவுக் களம் சுக்கான் கொடுத்தது.

"அக்கா அப்படியே கிடக்கட்டும் நான் வந்து கவனிக்கிறேன். திரும்பத்திரும்பச் சொல்லிப்போன அவள் வார்த்தைகள் எதிரெலிக்க அவள் வருகைக்காய் யாவும் அப்படியேதான இருந்தது.

இந்தச் சண்டையில் நான் செத்திட வேணும் என்ற வெளிப்பாடுகளுக்கு நடுவில் அவள் உறுதியாய்ச் சொன்னாள் "நான் சாக விரும்பேல்ல" சாதிக்க வேணும் வாழ வேணும் வருவன் வருவன்; என்று.

18.03.1999 களமிறங்கினாள் 17.04.1999 வரலாறாகிப் போனதாய் கிளிநொச்சி பரந்தன் சுட்டதீவுப் பகுதியில் எதிர்பாராத நேரடி மோதல் சொன்னது.

காலத்தின் கட்டளையில் கடமையுனர்ந்தவள். கட்டுமாணப் பணிக்காய் 3 வருடங்கள் கணிப்பொறியில் கணிப்புச் செய்தவள். கால நீட்ச்சியில் கடமை நீட்ட காலன் கணக்கு வைக்க வில்லை. அவள் தண்டனை பெற்று தட்டி நிமிர்த்தப்பட்டது. மிகக் குறைவு. சுய திட்டமிடலில் பணி பகிர்ந்து பணி இலகுவாக்கும் பக்குவத்தால் எப்பணியும் அவளுக்கு பஞ்சு.

முடியாது என்பது அவள் அகராதியில் கிடையாது. அவளும் ஜெனரேட்டரும் என்று கதையே எழுதலாம்.அவள் ஜெனரேட்டர் ஸ்ரட் செய்ய எடுத்துக்கொணட் முயற்சியை நினைக்க.

ஆண் போராளிகளே வழமையாக அந்த ஜெனரேட்டரை ஸ்டார்ட் செய்வது வழக்கம். அன்று இவள்தான் ஸ்ராட் செய்வாதாக சொன்னாள். சாதாரண பொறிகளைவிட இயல்பான இயக்கத்தில் இயக்கம் பெறும் இயல்பை அது இழந்தே இருந்தது. அவள் விடுவதாய் இல்லை. அன்று முழு நாள் அதே முயற்சியிலேயே அவள்.

முயற்சி வெற்றியாய் முடிந்ததிலிருந்து அதன் இயக்குநர் அவளேதான். காலம் மட்டும் ஆயுட்காப்புறுதி செய்திருக்குமானால் கனதியாய் அவள் சேவையை தாயகம் பெற்று பெருமைப்பட்டிருக்கும்.

2ம் லெப். சுரேந்தினி

ஜனந்தினி-பரமானந்தம் - இளவாலை

வலிகாமத்தின் வடபகுதியில் அமைந்த அழகிய கிராமம்தான் இளவாலை. விவசாயிகளின் கை வண்ணத்ததில் பசுமை குறையாது செழிப்புடன் விளங்கியது. தமிழீழ சுதந்திரப் போராட்டத்திற்கு பெரும் உறுதுணையாக பல ஆண், பெண் போராளிகளைத் தந்து புகழ் பூத்த மண்ணது. அந்த மண்ணில் பிறந்ததாலோ என்னவோ ஜனந்தினியும் அச்சம் சிறிதும் இன்றி ஆயுதம் கரத்தில் ஏந்தி களம் பல கண்டு வீரச்சாவை புகழுடன் தழுவிக் கொணடவள்.

இளவாலையைச் சேர்ந்த பரமானந்தம் தம்பதிகளுக்கு மூன்று சகோதரர்களுக்கு ஒரே ஒரு அன்புச் சகோதரியாக ஜனந்தினி மலர்ந்தாள். ஒரேயோரு பெண் குழந்தை என்று பெற்றோரும் இனத்தவர்களும் மிகச் செல்லமாக ஜனந்தினியை வளர்த்தார்கள். அவளை நல்ல முறையில் கற்பித்து ஆளாக்க வேண்டுமென பெற்றோர் பெருவிருப்புக் கொண்டனர். அவர்களின் விருப்பத்துக்கமைய தெல்லிப்பளை பகாஜனாக் கல்லூரியில் தனது ஆரம்பக் கல்வியை ஜனந்தினி ஆரம்பித்தாள். கல்வியில் அவள் கொண்ட விருப்பு அவளை ஆவலுடன் படிக்கத் தூண்டியது. ஒவ்வொரு வகுப்பிலும் தங்குதடையின்றி சித்தியேய்தினாள். இவளின் கல்வித்திறமையை பார்க்க கொடுத்து வைக்காமல் தந்தையார் இவளது சிறு வயதிலிலேயே காலமாகிவிட தாயின் அன்பான அரவணைப்பில், அவள் கொடுத்த ஊக்கத்தில் கல்விப் பொதுத் தராதர சாதசரண பரீட்சையில் திறமைச் சித்திகள் மல பெற்று சித்தியெய்தினாள். உயர் வகுப்பை உன்னதமாகப் படித்துத் தேறிவிடவேண்டுமென உறுதியான எண்ணதுடன் தன்னை தயார்படுத்திக் கொண்டிருந்த வேளை அவளது எண்ணத்தைக் கலைத்தது சிறிலங்கா இராணுவத்தில் தமிழர் மீதான தாக்குதல்கள்.

சிங்கள இராணுவம் தமிழர் மீது கேரத் தாக்குதல்கள் மாத்திரம் மேற்கொள்ளவில்லை. ஒரு இன அழிப்பையே மேற் கொண்டிருந்தனர். அத்தோடு தமிழரின் முன்னேற்றத்துக்கான கல்வியை திட்டமிட்டு அழிக்க முற்பட்டனர். அவர்களின் கொடூரத்தனமான குண்டு வீச்சுக்கு அடிக்கடி தமிழ்ப் பிள்ளைகள் படிக்கும் கல்விக் கூடங்கள் இலக்காகி சிதறின. இராணுவ நடவடிக்கைகளால் சேதமுறாத பள்ளிக்கூடங்களே தமிழ் மண்ணில் இல்லை என்று சொல்லலாம். கல்வியில் மேன்மை அடைய வேண்டுமென பெருவிருப்புக் கொண்டிருந்த ஜனந்தினியின் மனதை இது பெரிதும் பாதித்தது. தமிழ் மக்களின் உயிரினும் மேலான பொக்கிசமான கல்வியை பயில வாய்ப்பில்லாத நிலையை உருவாக்கிய அந்த எதிரிமீது ஜனந்தினி உள்ளூரக் கோபம் கொண்டாள். கல்வி... கல்விக்குத் தடையாய் இருக்கிற இந்தப் பேய்களை...... கோபத்தில் குமுறியவள் எதிரியை ஒழிக்க 1995 ம் ஆண்டு விடுதலைப் புலிகள் அணியில் போராளியாக இணைந்து கொண்டாள். 30 வது பயிற்சி முகாமில் தனது ஆயுதப் பயிற்சியைப் பெற்றுக் கொண்டாள். பயிற்சியின் நுட்பங்களை மிக இலகுவாக புரிந்து கொண்டு பொறுப்பாளர்களின் நன் மதிப்பை பெற்றுக் கொண்டாள். பயிற்சி முடிந்து வெளியேறும் போது சுரேந்தினி என்னும் போராளியாக வெளிவந்தாள். பயிற்சி முடிந்த பின் மற்றைய போராளிகளுடன் உயிர் காக்கும் சேவையான மருத்துவப் பகுதிக்கு அந்தத் துறையைப் பயில்வதற்காக அனுப்பப்பட்டாள். அந்த மருத்துவக் கல்லூரி பயிற்சியும் சுரேந்தினிக்கு பெரும் அக மகிழ்வினைத் தந்தது. போருக்கு பக்கபலமான பெரிய சேவை மருத்துவச் சேவை. போரில் காயப்படும் போராளிகளின் உயிரைக் காப்பாற்றுவதும் குணமடையச் செய்து எதிரியை அழிக்க மீண்டும் களம் அனுப்பும் பாரிய பணியை மருத்துவ பிரிவுவல்லவா செய்து கொண்டிருக்கின்றது. அந்தச் சேவையில் விருப்புடன் செயலாற்றியதாலோ என்னவோ சுரேந்தினியின் முகம் எந்த நேரமும் சாந்தமாக அமைதியாக இருக்கும். சக போராளிகளுக்கு எந் நேரமும் எந்த வித உதவி என்றாலும் சிறிதும் தயங்காமல் இன்முகத்துடன் செய்து முடிப்பாள். கோபம் என்பதை இவளிடம் காணவே முடியாது. மருத்துவத் துறையில் மிகவும் திறமையாகவும் கடமை உணர்வுடனும் செயற்பட்பாள்.

தான் மாத்திரம் திறமையாக இருந்தால் போதாது மற்றவர்களும் திறமைசாலிகளாக வரவேண்டும் என்பதற்காக தான் கற்ற அறிவினை மற்றவர்களுக்கும் எடுத்து விளக்குவாள். தமிழர் வாழ்வைக் குலைத்து இனத்தின் குரல் வாளையை முறுக்கி நறுக்கிவிட வென சிங்கள இராணுவத்தால் சூரியக்கதிர் 01 என நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டது. இரவு பகல் பாராது கண்விழித்த போராளிகளைக் காப்பாற்றுவதில் கடமை உணர்வில் ஈடுபட்டாள். அவளது சேவையைப் பெற்று எத்தனையோ போராளிகள் மீண்டும் களம் ஏறினார்கள். மருத்துவம் என்கின்ற அந்தப் புனித சேவையில் அவள் தொடர்ந்து ஈடுபட்டாள். சூரியக்கதிர் 01 நடவடிக்கையை அடுத்து முல்லைச் சமர் களத்தில் அவளது மருத்துவப் பணி தொடர்ந்தது. போர்களத்திற்கு மிக அருகே அவள் பணிவிடம் அமைந்திருந்தது. எதிரியின் வெறி கொண்ட தாக்குதலுக்கு சுரேந்தினி குறியானாள். அவள் உடல் தளர்ந்தது. மெல்ல மெல்ல மண்ணில் சரிந்தாள். தமிழர் தம் போர்க்காவியம் படைத்த முல்லைமண் அவள் உடலைத் தழுவிக் கொண்டது. அவள் மாவீரர் ஆனாள்.

இவளின் அன்பான நெருக்கமும் திறமையான செயற்பாடுகளும் இவளது சக போராளிகளுக்கு எந்நாளும் அவளை நினைவு கூரச் செய்யும். அவள் விட்டுச் சென்ற பாதையில் உறுதியுடன் விரையும் கால்கள் வெகுவிரைவில் தமிழீழம் வென்றெடுக்கும்

எழுதியவர் போராளி

இரண்டாம் லெப்டினென்ட் மாலதி

 

எமது சமூகத்தில் வேரூன்றியிருந்த, பெண் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும். பெண்ணானவள் இப்படித்தான் இருப்பாள். இதற்கு மேல் அவளால் முடியாது. ஆணைவிட பெண்ணுக்கு ஆற்றல் குறைவு என்ற கருத்துக்களை - 2ஆம் லெப். மாலதி 17 ஆண்டுகளுக்கு முன் பொய்யாக்கினாள்.

பெண்ணினால் எல்லாம் முடியும் என்று செய்து காட்டினாள். அந்நிய ஆக்கிரமிப்பில் எமது தேசம் துவண்டிருந்த போது வீறு கொண்டெழுந்தாள். பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாவதைப் பார்த்துக் கொதித்தாள்.

நாட்டின் விடுதலையோடு பெண்ணினத்தின் விடுதலையையும் கருத்தில் கொண்டு ஆயுதம் தூக்கியவள், அந்த இலட்சியக் கனவோடே வீரச்சாவை தழுவிக் கொண்டாள்.

அன்று(10.10.1987 ) நடுராத்திரியில் தமிழ் பெண்களுக்கு அநீதி இழைத்த, வல்லாதிக்க இந்திய இராணுவத்தை எதிர்கொள்ள கோப்பாய் கிறேசர் வீதியில் காத்திருந்தாள்.

1987 அக்டோபர் 10 ஆம் திகதி நள்ளிரவு 1 மணியளவில் இந்திய வல்லாதிக்க இராணுவம் மீது அவளது எம்16 ரக துப்பாக்கியிலிருந்த குண்டுகள் சீறிப்பாய்ந்தன. அந்தத் தாக்குதல் 2 ஆம் லெப் மாலதியின் இறுதித் தாக்குதல்.

புலிகள் போராட்ட வரலாற்றில் முதல் பெண் போராளி 2 ஆம் லெப் மாலதி வித்தாகி வீழ்ந்தாள். அது தமிழீழப் பெண்களின் எழுச்சிக்கு வித்தாகவும் அமைந்தது.

Extract from the book named "Women Fighters of Liberation Tigers"
written by Ms.Adele Balasingam


The Indo- LTTE war broke out on the 10th October1987. On the very first day of the war, the LTTE women unit confronted the Indian troops at the strategic junction of Kopay, a village 5 kilometers from the Jaffna city. As a convoy of Indian troops advanced along the Navatkuli-Kopay Road the LTTE women fighters encamped at Kopay were prepared to confront a powerful force.

The women fighters were near the Kopay junction in defensive positions when a convoy of Indian troops arrived in the black of the night. Hundreds of troops jumped out of their vehicles and started to advance towards the women fighter's positions. Heavy fighting broke out. Our women cadres fought hard, putting up fierce resistance against a formidable contingent with superior firepower. In that clash Malathy died. Malathy was the first women fighter to die in battle. Janani, a veteran of many battles, takes up the story of Malathy's death.

"We were in our bunkers firing at the army. Hundreds of Indian troops had jumped out of their vehicles and were firing as they moved towards us. Motor shells were exploding everywhere. We knew the army was advancing quickly. Malathy was shot in both legs. She couldn't move and she was bleeding profusely. Realising that she was mortally wounded, she swallowed cyanide. A decision had been made to withdraw because we were heavily out-numbered. Myself and another girl went over to carry Malathy. Malathy refused to come with us. She begged us to leave her and asked us to withdraw. Nevertheless, we lifted Malathy and carried her and when we arrived at a safe place she was dead."

Monday, September 13, 2010

2ம் லெப். பூபாலினி.

ஆனந்தகுமாரி.கோபாலபிள்ளை
வேலணை

வீரமரணம் - 29.08.1998
ஓயாத அலைகள் 02 இல் வீரமரணம்

2ம் லெப்ரினட் பூபாலினி, அவளிடம் எதிலும் ஒரு நேர்த்தி ஒழுங்குமுறை இருக்கும். எதனையும் முடிந்தவரை முழுமையாக, செம்மையாக,சலிப்பின்றிச் செய்யும் தன்மைகள் அவளிடம் அதிகம்.

அவளுக்காய் கொடுத்த பணி நிறைவு பெறும்வரை அவளைப் பசியோ, தூக்கமோ அண்டாது. அவளுக்கான பணியாய் அலுவலகப் பணி வழங்கப்பட்டிருந்த காலமதில், குறித்த அலுவலக நேரத்தில் முழுமையாக தொழிற்பட்டுக் கொள்வதோடு அந்நேரத்திற்கும், வேலைக்கும் அப்பாலும் சென்று கண்விழித்துக் கடமையில் ஈடுபட்டிருப்பாள்.

ஒழுங்குபடுத்தப்பட்ட வேலைநேரத்திற்கு அப்பால் என்றால், ஓய்வு நேரங்களையும் நித்திராதேவியிடம் சரணடையும் நேரங்களையும் தான் தியாகம் செய்ய வேண்டியிருக்கும். போராட்ட பணியே ஆழமான அர்ப்பணிப்பினை வேண்டிநிற்கும் பணி. அதனுள்ளும் அவள் ஆழமாய் சென்று அர்பணத்துள் அர்ப்பணம் செய்வாள்.

எதனையாவது செய்து முடித்து விடவேண்டுமென்று தீர்மானித்துக் கொள்வாளானால் அதனைச் செய்து முடித்து விட்டுத்தான் மறுவேலை நடக்கும்.

அவளின் ஒழுங்கிற்கு ஒரு உதாரணம்: நடைபெற்ற ஓட்டப் போட்டி ஒன்றில் பூபாலினியும் கலந்துகொண்டாள். ஆள் கட்டை அதிகம் ஓடமாட்டாள். அகலக்கால் வைத்தால் முடியாதுதானே! ஆனாலும் கலந்துகொண்டாள் தானும் கலந்து கொள்வதாய். அவளுக்குத் தெரியும் முதல் 3 இடங்களிற்குள்ளும் இடம் கிடைக்காது என்று. ஆனாலும் போட்டியில் கலந்து கொள்ள வேண்டுமென்றே கலந்துகொண்டாள்.

‘எதுவென்றிலும் கலந்து கொள்ளாதிருப்பதனை விடவும் கலந்து கடை நிலையை அடைந்தாக்கூட அதுகாரியம்’ என்ற அவள் நினைத்திருக்க வேண்டும்.

முதல் மூன்று நிலைகளுக்குள்ளும் வரமுடியாதென்று கணக்கிட்டுக் கொண்டோர் போட்டி நிறைவு பெறுவதற்கு முன்னராகவே நின்று விட இவள் மட்டும் போட்டிக்குரிய அத்தனை ‘ரவுண்டு’ களையும் ஓடி முடித்த பின்பே ஓய்வெடுத்தாள்.

“ஏன்ரியப்பா நின்றிருக்கலாமே! ஏன் உந்த வீண் அலைச்சல்” என்றபோது அவள் கூறினாள்:

“எதுவொன்றிலும் கலந்துகொண்டாலும் அது அது முடியும் வரையில் அது எத்தனையாவதாக வருவதானாலும் சரி ஓடிமுடிக்க வேண்டும்” என்று. அதுதான் ஒழுங்குமுறை அது தான் அவள்.

பூபாலினி, அவள் தனக்கென தனித்துவமான சில குணவியல்புகளைக் கொண்டிருந்தாள். அவளது அக் குணவியல்புகளே அவளை ‘பரோபகாரி’, ‘அம்மா’ ‘களஞ்சியம்’ ‘அழுத்தம்’ தாங்கி ‘விசுவாசம்’, ‘உபதேசி’ என அவளைப் பட்டப்பெயர்களால் அலங்கரித்துக் கொண்டன.

பரோபகாரி, யாரிடமிருந்தும் உதவிகளை எதிர்பார்க்காவள். ஓய்வாய் இருப்பது அவளுக்க ஒத்தவராது. எதையாவது செய்துகொண்டிருக்க வேண்டும்.

உணவுப் பண்டங்கள் வாய்ப்பாய்க் கிடைக்கிற போது பதுக்கிப் பத்திரப்படுத்தி, வேண்டும்போது பகிர்ந்தளிப்பாள். அதிகமாக இருப்பின் மீளவும் அவை பதுக்கப்படும். வேண்டும் போது வெளிப்படும். இதற்காய் அவளுக்குக் கிடைத்த மகுடங்கள் தான், ‘பரோபகாரி’, ‘களஞ்சியம்’, ‘அம்மா’,

சகதோழிகள் நோய்வாய்ப்படுகின்ற போதும் அவர்கள் ஏதேனும் பற்றாக்குறைகளுக்கு உட்படுகின்ற போதும் அவளிடம் உள்ளவை அவர்களுடையதாகும். சலிப்பின்றி, சங்கடமின்றி பராமரிப்புத் தொடரும். அழுத்தங்கள் தாங்கிக் கொள்ளும் மனோபவத்தினை அவள் இயல்பாய்க் கொண்டிருந்தாள். அவை அத்தனையாலும் தான் அவள் ‘விசுவாசி’ என்றும் அழைக்கப்பட்டாள்.

அத்தனை விசுவாசம் கொண்ட விசுவாசி ஒருமுறை தவறியும் போனாள் தான்.

“ஒருவன் விழாமல் நடந்தான் என்பது பெருமையல்ல விழுந்தபோதும் எழுந்து நடந்தான் என்பதே பெருமை” என்ற ஆண்றோர் வரியோ.

“விழுமின் எழுமின் கருதி கருமம் கைகூடும் வரை உழையின்” என்ற விவேகானந்தர் வரிகளை மனங்கொண்டாலோ என்னமோ அவள் தன் தவறை உணர்ந்துகொண்டாள்.

எந்தவொரு அமைப்பிலும் ‘இரகசியக் கசிவு’ என்பது தெரிந்தோ தெரியாமலோ இடம்பெறுமாயின் அது பெரும் விளைவகளை உண்டுபண்ண வல்லது. அவள் உண்மையை உணர்ந்து கொண்டாள்.

போர்க்காளப் பணித்தேர்வு தனக்கு வேண்டியதே என்பதனை உள்ளிருத்திக் கொண்டாள்.

10.06.1995 இல் போராட்டவாழ்வில் இணைந்து பயிற்சி முடித்து சூரியக்கதிர் - 02 இல் காவும் குழுவாய் போர்கள அனுபவமும் பெற்றிருந்த அவளிடம் இயல்பாயிருந்த பொறுப்புணர்வும், செயல்திறத் தேர்ச்சியும் அவள் கற்றுக் கொண்டிந்த தட்டெழுத்து நெறியும்தான் அவளை அலுவலகப் பணிக்காய் உள்ளீர்த்துக் கொண்டிருந்தது உண்மை. செயல்திறனால் உழைமின் உழைமின் என்று உழைத்தும் உண்மை.

விழுமின் எழுமின் கருதிய கருமம் கைகூடும் வரை உழைமின் என்ற வரிக்காய் விழுந்தவள் அல்ல என்றாலும் விழுந்தாள் என்பது அதுபோன்றே என்பதனைவிட அதனிலும் வேகமாய் எழுந்தாள் என்பதும் அதேபோன்றதான உண்மையே.

விழுதலில் சினந்து ஓர்மம் உட்புகுந்து அவள் வேகம் விருட்சமாகிக் கொண்டது.

ஜெயசிக்குறுவில் தானும் ஜெயிப்பதாய் கங்கணம் கட்டிக்கொண்டாள் போலும் அவளின் பொறுமையும் நிதானமும் வேவுப் பணிக்காய்த் தேர்வாக்கிகொண்டது. குறுகிய காலத்திலேயே அவள் அவ் அணியின் 2ம் அணித்தலைவியானாள்.

பண்டாரிகுளத்திலிருந்த புளியங்குளம், புதூர், விஞ்ஞானகுளம், கனகராயன்குளம்,கிளிநொச்சி, மாங்குளம், ஓலுமடு அம்பகாமம், ஓயாத அலைகள் 02 என அவள் பணி பரந்து விரிந்து கொண்டது. அது பனிச்சங்குளப் பகுதியில் வைத்து ‘எல்.எம்.ஜி’ கனரகப் பயிற்சி வழங்கி மாங்குளப் பகுதியில் ‘எல்.எம். ஜி’ கனரக ‘லோட்’ராக்கிக் கொண்டது.

ஓயாத அலைகள் 02 ற்கு அவள் ‘எல்.எம்.ஜி’ கொண்டே களமிறங்கினாள்.

ஓயாத அலைகள் 02 களமிறக்கம் அவளுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியைக் கொடுத்தது. அவள் வளர்ந்த வாழ்ந்த இடமது.

அவள் பருவமறிந்ததிலிருந்து பல இடப்பெயர்வுகளைச் சந்தித்திருந்தாள். பிறந்தது வேலணையில் என்றாலும் அவள் வாழ்வு அவ்வப்போது நடந்துகொண்டிருந்த இடப்பெயர்வுகளுக்குரிய விதமாய் கணேசபுரம், பரவிப்பாஞ்சான்,வட்டக்கச்சி, கிருஸ்ணபுரம், ஆனந்தபுரம்....என்று நகர்ந்து கொண்டபோதுதான் அவள் நாலும் உணர்ந்தாள். நமக்கொருநாடு நாடாயிருக்க வேண்டுமென்று கணேசபுரத்தில் ஆரம்பித்த அவள் கல்வி வாழ்வு, கனகாம்பிகைக்குளம் அ.த.க பாடசாலை, கிளிநொச்சி கனிஸ்ர வித்தியாலயம் (தற்போது கிளிநொச்சி மாகா வித்தியாலயம்) வேலணை நடரலசர் வித்தியாலயம், மீளவும் கிளி-கனிஸ்ர வித்தியாலயம், வேலணை வைத்திலிங்கம் துரைசாமி வித்தியாலயம் என்று மாறி மாறி அலைப்புக்குள்ளானது. அந்நேரத்திலும் கூட ஒருவாறு கா.பொ.த சாதாரண தரத்தை நிறைவாக்கிக் கொண்டு தொழிற்பயிற்சியாய் தையலும், சுருக்கெழுத்தும், தட்டெழுத்தும் பயின்று கொண்டாள்.

எழுதுவினைஞையாய் சிலகாலங்கள் தனியார் நிறுவனங்களில் பணியும் செய்தாள்.

பணியைப் பணியாய்ச் செய்யும் தேசமதில் தான் இல்லை என்பதனை அவள் புரிந்து கொண்டபோது தேசம் இருப்பை நிலைநிறுத்தும் போராட்ட வாழ்வில் அவள் தன்னை இணைந்துக் கொண்டாள். ஓயாத அலைகள் 02 இல் 29.08.1998 இல் கிளிநொச்சி வெற்றிச் செய்தியோடு வீரமரணமடைந்தாள்.

திரு.திருமதி கோபாலபிள்ளை கனகாம்பிகை தம்பதிகளின் நான்காவது புதல்பியான ஆனந்தகுமாரி என்ற இயற்பெயர் கொண்ட 2ஆம் லெப்ரினட் பூபாலினி ஆலங்குளம் துயிலறையில் துயின்று கொண்டிருக்கிறாள். அவள் இலட்சியம் ஈடேறும் சமாதானம் சகவாழ்வு அல்லாதபோதும் அவர்கள் இலட்சிய நெருப்பு சகவாழ்வு கொடுக்கும். அவள், அவள் போன்றவர்கள் இலட்சியச் சாவால் வாழ்ந்து கொண்டிருப்பவர்கள். இலட்சிய நெருப்பு இமயம் தொடும் ஈழத்தைப் பிறப்பாக்கும்.